“விலாசம் தேடும் விழிகள்”





2004 ஆம் ஆண்டு வெளிவந்த எனது “விலாசம் தேடும் விழிகள்”  என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து கொஞ்சம்...



என்னுரையாக.

இதுயென் முதல் நூல்.
தமிழின் ஆடைக்கு எந்தறிகள் தந்த தங்கநூல்.
இந்நூலுக்கு மூலமே என் ஆர்வம்தான்.

செருப்பில்லாத பாதங்களுக்கு சேற்றின் மூலம்செருப்பணிந்து மகிழ்ந்த காலத்திலும்,ஆவினங்களை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிட்டு,நான் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்த அந்த பிள்ளை பிராயத்திலும் என் வார்த்தைகளுக்கான வலிமையிருப்பதாய் அறியவில்லை.

நீர்த்தேக்க பாலங்கள் நீரின்றி நின்றுக் கொண்டிருக்கும் அந்தக் குளத்தங்கரையில் தான் என் முதல் கவிதை முத்துக் குளித்தெழுந்தது.
அந்த வறண்ட பிரதேசத்து தாவரங்களுக்கும் மரங்களுக்கும் உயிர் இருப்பதற்கான உத்திரவாதமே என் கவிதையைக் கேட்டு தலையாட்டுவதாகத்தான் இருக்கும்.


என் கந்தல் ஆத்மா அழுதுக் கொண்டே திரிகின்றது.என் கந்தல் ஆத்மாவின் கண்ணீரின் வெப்பமோ வேதனையோ உங்களைத் தொட்டால் சேமித்து வையுங்கள்.அது தார்மீகப் பூமியின் தாகம் தீர்க்க உதவலாம்.



                                                                                                    நம்பிக்கையோடு
                                                                                                    இரா.அறிவழகன்.







இனி கவிதைச் சிதறல்களைப் பார்ப்போம்...




இனி-
மனிதனின்
மழைக்கனவுகளில்
பெட்ரோல் பொழிந்தால்
மட்டுமே
பேரானந்தப்படுவான்.


******

நகரங்களில் வீடுகள்
குட்டி குட்டித் தீவுகள்
சமையல் வாசனைக்கூட
சற்று வெளியேறாமல்
சன்னல் சாத்தும் மனிதர்கள்.


******

பூக்களைப் பறித்து
பெட்ரோலில் நனைக்கும்
பொல்லாக் கனவு
பொசுக்கென ஏன் வந்தது.


******


இங்கே
வள்ளலாரைப் பற்றி
வகுப்பெடுக்கக் கூட
வாள் பிடிக்கத் தெரிந்தால்
மட்டுமே
தேர்ந்தெடுக்கப் படுவார்கள்


-******

பெரியார்

ஊமையாய்க் கிடந்தவரை
பாடவைத்த
பகுத்தறிவு புல்லாங்குழல்.


******
ஆசிரியர்களைப் பற்றி
சம்பளச் சேவல்களாய்
கூவாதீர்கள்
அங்கங்கே
சேவல்கள்
விவாதிப்பது வானம்
விடிவதற்கே
விடியல் தாங்கி
சேவல்களாய் இருங்கள்.


******

காதல்

எரிக்கும் வேலையை
நெருப்பு மட்டுமே
செய்வதில்லை
உன் சிரிப்பும் சேர்ந்தும்தான்.


******

நீ பெயர் சொல்லி எனை அழைத்தாய்
சொர்க்கத்தில் அச்சானது
எந்தன் பெயர்


******
என்றோ ஒருநாள்-
என்னருகில் வந்து
ஏதோப் பேசிப் போனாய்
பஞ்சாலையில்
வந்துப் போனத்தீயாய்.


******
என் எழுதுகோல்
எழுதியதெல்லாம்
கர்ப்ப கவிதைகளல்ல
கருப்பு கவிதைகள்
பதுக்கியே பாதுகாத்து வருகிறேன்.


******
நான் விரும்புவதெல்லாம்
ஒன்றைத்தான்
கட்டியணைக்க
கழுத்திருக்கு அது போதும்



******

போதி மரம்

ஒவ்வொரு
குழந்தையும்
போதி மரம்.

போதிமரத்தை
போற்றி வளருங்கள்
புத்தர்களெல்லாம்
தானே
பூரித்தெழுவார்கள்.

******


அன்றும் இன்றும்
சூரியன்
சிவப்பாய்த்தான்
எரிகிறது
ஆனால் வெளிச்சம்தான்
இன்னும் வரவில்லை.



******

ஆட்டோகிராப்
பக்கங்கெல்லாம்
அழுகையில் நிரம்பும்
முகவரிகளை
பரிமாறிக் கொள்வோம்
முகங்களை?



******

ஹைக்கூ...


விடாத
அடைமழை
தேவையொரு குடை
அவள் விழி.



******
யார் அழைத்தாலும்
ஓடிவரத் தயார்
நிலா.



******

காதல் தோல்வியில்
களங்கினான் காதலன்
எந்த மாடலில்
தாடிவைக்கலாமென்று.



******


நன்றி

பேரா.ஆனந்தன்
பேரா.நல்லுசாமி
கனகராஜ்
லூயிஸ்
தியாகு.





Comments

Anonymous said…
அன்றும் இன்றும்
சூரியன்
சிவப்பாய்த்தான்
எரிகிறது
ஆனால் வெளிச்சம்தான்
இன்னும் வரவில்லை.

அருமையான கவிதைகள்...வாழ்த்துக்கள் நண்பரே...

என் கவிதைகளையும் வாசித்து சொல்லுங்களேன்..