கோடிட்ட இடங்களை நிரப்புதல்-புத்தகத்தைப் பற்றி சில குறிப்புகள்







"அப்பாவோடதான் வாழ ஆசை" எனப் பெரியமனுசி போல் 
சொல்லும் எங்கள் சின்ன மகள் "புப்பு" என்கிற 
ஸ்ரீசங்கரகோமதிக்கு... 




என்றுதான் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகத்தின் பக்கங்கள். ஒவ்வொரு பக்கங்களை புரட்டும் போதும் நமக்குள் கிடக்கும் பால்யம் தன்னைப்புரட்டிப் பார்த்துக்கொள்கிறது.உலகத்தின் ஓட்டத்தோடு என்னைப் பொருத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தவனை எதுவோயொன்று தடுத்து நிறுத்தியதைப் போல இருக்கிறது இந்தத் தொகுப்பிலுள்ள கவிவரிகள்.படிக்க படிக்க என் பால்யத்தை கண்முன் நிறுத்தி ஒப்பனை செய்துப் பார்க்கிறது என் மனம்.இழந்தயொன்று இன்று கைக்குள் சிக்கியதாய் கொண்டாட்டம் கொள்கிறது என் பால்யம்.


                                     _______________________________

குழந்தைகள் உலகம் போலி ஒப்பனையில்லாதது.அதனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் நிறையவே விசயங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்த கவிதைகளே போதுமானது,



 கசடற


தன் பிரிய உலகத்தில்
கடந்து போகும்
பூனை,நாய்,மாடு,ஆடு,கோழி
அனைத்தையும் குட்டி குட்டா
என்று அழைப்பதோடு
வீட்டில்
அம்மா குட்டி,அப்பா குட்டா
எனவும் சமயத்தில்
அழைக்கிறாள்.


குட்டி என்றால் பெண்பாலையும்
குட்டா என்றால் ஆண்பாலையும்
குறிப்பதென்று
யாரிடம் எப்பொழுது கற்றாள்
என்று தெரியவில்லை.


ஆனால் 
பிரியத்திற்கு
உயர்திணை,அஃறிணை
பாகுபாடு இல்லை
எனக் கற்றுக் கொடுக்கிறாள்
தமிழ் ஆசிரியை ஆன எனக்கு.






               தொலைத்த தேடல்


இருவருடங்களுக்கு முன்னம்
கோடை விடுமுறையில்
ஊருக்கு வந்திருந்த
அத்தைப் பையன் "ஸ்ரீஜித்"துடன்
வ.உ.சி மைதானத்தில் குதிரைச் சவாரி 
போனபோது தொலைத்த சிவப்புச் செருப்பை,
நேற்றைக்குப் போன போதும்
தேடச் சொல்லி அழுகிறாள் "புப்பு"


  

கடைசியாக ஒன்றே ஒன்று, தொலைத்த தேடல் என்ற கவிதையில் முன்னர்  தொலைத்ததை தேடச்சொல்லி அழுவதைப் பார்க்கையில், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் "புப்பும்" முன்னர் தொலைத்த எதையாவது தேடச்சொல்லி அழுதால்தான் என்ன என்று நினைக்கவைக்கிறது.





பின்குறிப்பு: அன்புள்ள சுமதி ராம் அவர்களே, அச்சு அசலான குழந்தைகள் உலகத்தை படம்பிடித்ததில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள். தொடருங்கள்... 


அன்புடன்
அறிவழகன்


புத்தகம் கிடைக்குமிடம்  :


கோடிட்ட இடங்களை நிரப்புதல்
சுமதி ராம்
வெளியீடு: வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்
திருவண்ணாமலை
பேசி: 9444867023
விலை ரூ.50/-





Comments