பகுதி-2

வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ள நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து,சொந்த நிலங்களிலே அகதிகளாய் அடிமைகளாய் ஆக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வை, மலைக்காடுகளின் சீரழிவை,வரலாற்று ஆய்வாக அக்கறையோடு ஆவணப்படுத்திய தோழர்கள் இரா.முருகவேள்,"ஒடியன்" இலட்சுமணன் அவர்களையும் கோவன் வெளியீட்டகத்தையும் வாயார மனதார பாரட்டுவோம்.


முதலில் ஒன்றைச் சொல்லிவிட்டுதான் இதை எழுத ஆரம்பிக்க வேண்டும்.கிட்டத்தட்ட இந்தக் குறுந்தகடு கையில் கொடுக்கப்பட்டு,படத்தை பார்த்த பிறகும் எழுத நினைத்து,இன்று, நாளை என எழுத ஆரம்பிப்பதற்குள் நாட்கள் பத்தை கடந்துவிட்டது.அப்படியொரு முக்கியப் பணிகளில்(?!) மூழ்கிப் போனேன் நான்.இன்று எப்படியாவது எழுதியாக வேண்டும் என கணிணியில் மீண்டும் படத்தை ஓடவிட்டேன் .பல்வேறு புல்லினங்களின் கீச்சல்களோடு நாளி ஆவணப்படம் துவங்க ஆரம்பிக்கிறது.


"தென்னிந்தியாவின் முதுகெலும்பாய் இருப்பவை மேற்குத் தொடர்ச்சி மலைகள்" என இலட்சுமணன் அவர்களின் குரல், மலைமுகடுகளில் தழுவிக் கொண்டிருக்கும் சாரலாய் நம்மை அணைத்து மலைப்பயணத்திற்கு அழைத்து செல்கிறது.பல்லாயிரம் ஆண்டுகளாய் இந்த மலைகளில் அடிமைத்தனத்தையும்,ஆணாதிக்கத்தையும்,பேராசை,நிலவுடைமை முறையை அறிந்திராத பல்வேறு இன பழங்குடிகள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.அம்மக்கள் "தேவைக்கு மட்டுமே விவசாயம்,தேவைக்கு மட்டுமே வேட்டை"என காட்டை செழிப்போடு வைத்திருந்தனர்.அந்த மலைக்காடுகளில் வாழும் பல்வேறு உயிரினங்களான மான்கள்,மீன்கள்,யானைகள்,பறவையினங்களைப் போலவே அங்கு வாழும் பழங்குடி மக்களையும் காடுகளிலிருந்து தனித்து பிரித்துவிட முடியாத அளவிற்கு காடுகளோடு ஒன்றிப் போனது அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு,கலாச்சாரம் என்று ஆணித்தரமாக எடுத்துவைக்கிறது நாளி.

பின்பு வந்த சமவெளி செல்வந்தர்களால்,அரசுகளால்,வெள்ளைக்காரர்களால் காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக களவாடப் பட்டதை கலக்கத்தோடு பதிவு செய்கிறது நாளி. கருப்பு தங்கம் என அழைக்கப்பட்ட மிளகும் தந்தமும் அம்மக்களின் சுதந்திர வாழ்வை சுவைக்க ஆரம்பிக்கிறது.அதற்கு அந்த அரசுகள்  கையாண்ட வழிமுறைகள் தான் சைவமும்,சமணமுமான மதங்கள்.

சமவெளி மனிதர்கள் பழங்குடி மக்களைப் போன்று காடுகளை த் தாயாக, தெய்வமாக பார்க்கவில்லை பணம் கொழிக்கும்   புதையலாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

முடிவாக சொல்வதற்கும் ஒன்று இருக்கிறது ,

காடு பழங்குடி மக்களின் இரத்தமும் சதையும்
அதற்குதான் 
இரத்தமும் சதையும் சிந்தி போராடுக்கின்றனர்.








படங்களுக்கு நன்றி: ஈரோடு கதிர்




Comments