Tuesday, February 21, 2012

அம்மா எப்ப வரும்





                             1


ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த வீட்டில் குன்னன் அம்மாவின் பழஞ்சேலையில் சுருண்டு கிடந்தான்.அவன் அம்மாவும் அக்காவும் ஆளுக்கொருப் பக்கமாய் பழைய வேட்டி சேலையை போர்வையாக்கி தங்கள்
உடல் குறுக்கி உறங்கிக் கொண்டிருந்தனர்.அவன் அப்பன் ராமன் வெளித்திண்ணையில் கட்டில் போட்டு படுத்திருந்தான்.கட்டிலுக்குக் கீழே அவன் நாய் மணி தன் தலையை கவிழ்த்துப் போட்டு உறக்கத்தில் அடிக்கடி தன் காதை ஆட்டிக் கொண்டிருந்தது.அந்த ஓட்டுவீடு பெரிது ஆனால் அதைவிட அந்த வீட்டில் வறுமையின் பரப்பளவு பெரியதாய் இருந்தது. சுவர்கள் விரிசல் கண்டு ஓடுகள் விழும் நிலையிலிருந்தது.


வெயில் வந்து அவன்முகத்தில் அறையும்வரை உறங்கிக் கொண்டிருந்த குன்னன் மெல்ல புரண்டு தன் அம்மாவைத் தேடினான்.பாயில் யாருமில்லை என்றதும் மெல்ல எழுந்து வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தான்.தெருவில் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த அக்காவிடம் அழுதுக் கொண்டே கேட்டான்.

“அம்மா எங்கே”

அம்மாவும் அப்பாவும் காத்தாலயே வேலைக்கு போய்ட்டாங்கடா

வா சோறு போடுரேன் என்று தம்பியின் அழுகையை தேத்த முற்பட்டாள்.
அவளுக்கு வயது ஏழு ஆகியிருந்தது.அவள் தம்பி குன்னனுக்கு அஞ்சு வயது.
தட்டில் போட்ட கழிசோற்றை திண்றுக் கொண்டே அக்காவிடம் கேட்டான்

"அம்மாவும் அப்பாவும் எப்ப வருவாங்க"

"ராத்திரிக்கு தாண்ட வருவாங்க என்றாள்".   

அழுதுக் கொண்டே சாப்பிட்டு தட்டைத்தூக்கியெரிந்துவிட்டு தெருவுக்கு ஓடினான்.கண்ணங்களில் காய்ந்துபோன கண்ணீர் இன்னும் அப்படியே இருந்தது.அக்கா மற்ற பிள்ளைகளோடு பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தாள்.குன்னன் அவள் அருகில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தான்.நாளெல்லாம் விதவிதமான விளையாட்டுகள்தான் அவனுக்கு ஆறுதல்படுத்தியது.பருவகாலங்களை போல விளையாட்டுகளும் மாறி மாறி வரும்.கண்ணாமூச்சி, சீவாங்குச்சி விளையாட்டு,நொண்டி,பம்பரம் கிட்டிபுல்,கோலிக்குண்டு,சில்லு,பல்லாங்குழி,கிச்சுகிச்சு தாம்பூலம்ன்னு.ஒருகாலத்தில் பம்பரம் விளையாட்டு எல்லோராலும் விளையாடப்பட்டால் அதற்குப் பிறகு பம்பரம் காணமல் போய்விடும் அதற்க்குப் பிறகு வேறொரு விளையாட்டு இப்படி மாறிக்கொண்டிருக்கும்.


பக்கத்து ஊருக்கு கிரைசல் வேலைக்கு போயிருந்த ராமனும் அவன் மனைவி மூக்கம்மாவும் இரவு எட்டு மணிக்கு கிரைசல் கம்பெனி லாரியில் வீடு திரும்பினர்.ராமனுக்கு சூப்ரவைசர் வேலை,அவள் மனைவி மூக்கம்மாவுக்கு லோடு சுமக்கும் வேலை.காலையில் பானையில் உருண்டையாக்கி தண்ணீர் ஊற்றி வைத்திருந்த கழிசோற்றை தின்றுவிட்டு பிள்ளைகளிரண்டும் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.


கதவைத் திறக்கும் சத்தத்தோடு அம்மாவின் கூப்பாடும் கேட்ட குன்னன் ஓடிப்போய் அம்மாவின் கால்களைச் சேர்த்து கட்டியணைத்துக் கொண்டான்.அவன் முகத்தில் பிரகாசம் பொங்கி உடம்பெல்லாம் களிப்பில் குதியாட்டம் போட்டன.மூக்கம்மா அவனைத்தூக்கி அணைத்துக் கொண்டே தன் முந்தானையிலிருந்த காரசேவும்,முருக்கு பொட்டலத்தையும் தந்தாள்.அவன் கீழேயிறங்கி ஓடிப் போய் நான்கு கிண்ணத்தை எடுத்து,இது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இது அக்காவுக்கும் எனக்கும் என்று பங்குபோட்டான். தானே பங்குபோட்டாலும் தன் கிண்ணம் மட்டும் கொஞ்சமாய் இருப்பதாகவே
அவனுக்கு எப்போதும் தோன்றும்.அக்காவிடமிருந்து கொஞ்சம் அம்மாவிடமிருந்தும் கொஞ்சம் எடுத்து தன் கிண்ணத்தில் போட்டுக் கொள்வான்.தனக்கு மட்டும் கொஞ்சமாக இருக்கு என அக்கா கோவித்துக் கொண்டு வேண்டாம் என்று போய்விடுவாள்.மூக்கம்மா “பாவம் அவன் சின்னப்பையந்தானே என்று தன்னிடமிருந்து கொஞ்சம் போட்டு ஆறுதல்படுத்துவாள்.குன்னன் தன் முகத்தை கோணலாக்கி அக்காவிடம் காட்டிவிட்டு சாப்பிடுவான்.


சிலநேரம் நல்ல இருட்டுக்கட்டி வரும் அம்மா அவனை தூக்கத்திலிருந்து எழுப்பி சாப்பிட கொடுப்பாள்.நல்ல தூக்ககலக்கத்தில் சாப்பிட்டுவிட்டு உறங்கிபோவான்.காலையில் எழுந்ததும் என்னோட பங்கு எங்கேயென்று அடம்பிடித்து அழுவதைப் பார்த்து தன் பங்கிலிருந்து எடுத்து கொடுப்பாள் .சில சமயங்களில் அம்மா வாங்கிவரும் இனிப்பு பொருளை சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்து “தம்பி இந்தாட எனக்கு இனிப்பு பிடிக்காது என தன் பங்கையும் எனக்கே தந்து அதிசயத்தையும் நிகழ்த்துவாள் அக்கா.இனிப்பு பிடிக்காத குழந்தை எங்காவது இருக்குமா என ஆச்சரியம் அவனை அடைத்துக் கொள்ளும். 


                                                                                    -  தொடரும்


No comments: